திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அமோக வெற்றி


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அமோக வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 23 May 2019 8:15 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அமோக வெற்றி பெற்றார். 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்கு வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளரை தோற்கடித்தார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 329. இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதி முழுவதும் 1,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 329 பேரில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். இது 68.80 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

24 வேட்பாளர்கள் போட்டி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் டாக்டர் வி.இளங்கோவன் (தே.மு.தி.க), தி.மு.க. கூட்டணியில் எஸ்.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), அ.ம.மு.க. சார்பில் சாருபாலா தொண்டைமான், மக்கள் நீதிமய்யம் சார்பில் வி.ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.வினோத், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ். பாலமுருகன் உள்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஏப்ரல் 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வந்து பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. அந்த அறைகளை சுற்றி துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

வாக்கு எண்ணும் பணி

வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் முன் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நேற்று காலை 6 மணி முதல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள்.

சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முன்னதாக திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ். சிவராசு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அறைகளை திறக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியாளர்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசையாக எடுத்துக்கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைகளுக்கு சென்றனர்.

சுற்றுவாரியாக அறிவிப்பு

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்த மேஜைகளில் வைத்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 10.30 மணி அளவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தபால் வாக்குகளும் எண்ணப்பட்டன. 3 டிரங்பெட்டிகளில் இருந்த தபால் வாக்குகள் ஒவ்வொன்றாக பிரித்து எண்ணப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுற்றுவாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இறுதியாக இரவு 8 மணி அளவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்கு -15,08,329

பதிவானவை -10,48,779

செல்லாத ஓட்டு - 717

(4,59,286 ஓட்டு வித்தியாசம்)

1.எஸ்.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - 6,21,285

2.டாக்டர் வி.இளங்கோவன் (தே.மு.தி.க.) - 1,61,999

3.சாருபாலா தொண்டைமான் (அ.ம.மு.க.) - 1,00,818

4.வி.வினோத் (நாம் தமிழர் கட்சி) - 65,286

5.வி.ஆனந்தராஜா (மக்கள் நீதிமய்யம்) - 42,134

6.எஸ்.பாலமுருகன் (பகுஜன் சமாஜ் கட்சி) - 3,961

சுயேச்சைகள்

7.பி.ஆசைத்தம்பி - 2,685

8.எஸ்.ஏசுதாஸ் - 1,303

9.பி.கணேசன் - 1,324

10.எஸ்.நாச்சி - 2,368

11.ஏ.அருணாச்சலம் - 4,892

12.ஆர்.கணேஷ்- 1,223

13.சி.கருப்பையா- 1,218

14.கே.காமராஜ் - 731

15.கே.எம்.கார்த்திக் - 2,136

16.வி.கோபாலகிருஷ்ணன் - 2,532

17.கே.சாதிக் பாட்சா - 3,376

18.பி.சுந்தரராஜன் - 3,451

19.செல்லபெருமாள் - 2,241

20.எஸ்.திருநாவுக்கரசு -3,669

21.துரைபெஞ்சமின் - 876

22.கே.புஷ்பராஜ் - 1,604

23.பி.விஜயகுமார் - 1,354

24.எஸ்.ஜெயராம் மேத்தா- 1,159

நோட்டா - 14,437

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story