அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தாமதம் அதிகாரிகளுடன், முகவர்கள் வாக்குவாதம்-பரபரப்பு


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தாமதம் அதிகாரிகளுடன், முகவர்கள் வாக்குவாதம்-பரபரப்பு
x
தினத்தந்தி 24 May 2019 4:00 AM IST (Updated: 24 May 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங் களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில்நாதன், தி.மு.க. வேட்பாளராக செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, நேற்று கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தி.மு.க. முகவர்கள் உள்ளிட்டோர், வாக்கு எண்ணும் அறை அருகே கூடி நின்றனர். இதனால் அந்த அறையில் இருந்து வெளியே வந்த தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி, தி.மு.க. வேட்பாளரிடம், தேவையானவர்களை தவிர மற்றவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்துமாறு கூறினார். வேட்பாளர் செந்தில்பாலாஜி, தி.மு.க. முகவர்களிடம் பேசினார். இதையடுத்து குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் தபால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது. இதில் 168 தபால் வாக்குகளில் 8 செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் 82 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 72 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3 வாக்கு களும், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்2 வாக்குகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் ஒரு வாக்கும் பெற்றனர்.

இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல், தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி மேற்பார்வையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. பின்னர் அந்த அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒவ்வொன்றாக, ஊழியர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் முதல் சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை விட கூடுதலாக 1,191 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, ஒருசில வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவற்றில் பதிவான வாக்குகள் சரியாக தெரியவில்லை.

இது தொடர்பாக முகவர்களுக்கும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கோளாறு ஏற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டன. பின்னர் மற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

கோளாறு ஏற்பட்ட எந்திரங்களை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரிசெய்த பின்னர், அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஓட்டு எண்ணும் பணியில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதுடன், அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.

Next Story