கன்னியாகுமரி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்து முடிந்தது


கன்னியாகுமரி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்து முடிந்தது
x
தினத்தந்தி 24 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்தது.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கன்னியாகுமரி தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்த வரை மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைத்து பூட்டப்பட்டன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையையொட்டி நேற்று அறைகள் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வரப்பட்டன. பின்னர் வாக்கு எண்ணும் அறையில் வைத்து வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திறந்து அதில் பதிவாகி இருந்த வாக்குகளை எண்ணினார்கள். இந்த பணியில் சுமார் 600 பேர் ஈடுபட்டிருந்தனர்.

காங்கிரஸ் முன்னணி

வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்பட்டது. குளச்சல் மற்றும் கன்னியாகுமரி சட்டசபை தொகுதிகளுக்கு 12 மேஜைகளும், மற்ற சட்டசபை தொகுதிகளுக்கு 10 மேஜைகளும் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றுகள் நிறைவடைந்ததும் எந்தெந்த வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் வாங்கி உள்ளனர்? என்ற விவரங்கள் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அதில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் எழுதப்பட்டன. மொத்த ஓட்டுகள் விவரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது.

முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 26 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்று முன்னணி வகித்தார். அதே சமயம் அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 9 ஆயிரத்து 828 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். அதன்பிறகு முடிவடைந்த ஒவ்வொரு சுற்றிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை பெற்றது. அதாவது சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் கை ஓங்கியது.

செல்போனுக்கு தடை

முன்னதாக காலை 7 மணிக்கு பலத்த சோதனைக்கு பிறகு முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என யாருமே செல்போனை வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லவில்லை. செல்போனை வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு செல்போனை வைத்து டோக்கன் பெற்று செல்ல வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயிலும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் காஜல் ஆகியோர் காலை 7 மணிக்கு முன்னதாகவே வந்து பார்வையிட்டனர். பின்னர் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஒலி பெருக்கி மூலமாக அறிவித்தார்.

பலத்த பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கையையொட்டி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு படையினரும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். வாக்கு எண்ணும் அறைக்கு முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு அறையின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதோடு ஓட்டு எந்திரங்களை கொண்டு செல்வதற்கும், அதிகாரிகள் செல்வதற்கும் தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கையையொட்டி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன் உள்ள சாலையில் வாகனங்கள் செல்லவும், மக்கள் நடமாடவும் அனுமதிக்கப்படவில்லை. எனவே வாகனங்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஒட்டு மொத்தத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்தன.

Next Story