கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க.வை முந்திய நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்தது


கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க.வை முந்திய நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 23 May 2019 8:48 PM GMT)

கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க.வை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று முந்தியிருக்கிறது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

அதே சமயத்தில் 3-வது இடத்தை பிடிப்பதில் அ.ம.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. வளர்ந்து வரும் 2 கட்சிகளும் வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெற முடியாது என்றாலும் யார் அதிக வாக்குகளை பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெரும்பாலானோர் அ.ம.மு.க. தான் அதிக வாக்குகள் பெறும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக அ.ம.மு.க.வை நாம் தமிழர் கட்சி முந்தியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி

அதாவது அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட லட்சுமணனை காட்டிலும் அதிக வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்றீன் பெற்றுள்ளார். முதல் சுற்றில் இருந்தே அ.ம.மு.க.வை விட நாம் தமிழர் கட்சி முன்னிலையில் இருந்தது. அதாவது முதல் சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி 645 வாக்குகளையும், அ.ம.மு.க. 430 வாக்குகளையும் பெற்று இருந்தது. 26-வது சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்து 887, அ.ம.மு.க. 11 ஆயிரத்து 611 வாக்குகள் பெற்றிருந்தன. அதே சமயத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு 8 ஆயிரத்து 106 ஓட்டுகள் கிடைத்தது.

Next Story