தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 24 May 2019 3:45 AM IST (Updated: 24 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருவது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ-மாணவிகளுக்கு அரசு விடுதி வசதி செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வசதி செய்து தரப்படும்.

3 ஆண்டுகள் படித்து முடித்த பின்னர், அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசை கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் செய்யவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே கலை ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, வி.வி.டி. சாலை, டூவிபுரம் 11-வது தெரு, தூத்துக்குடி என்ற முகவரியிலும், 9487739296 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
1 More update

Next Story