சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 9:18 PM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்த கட்சி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை நுழைவு வாசலில் பாதுகாப்பில் நின்ற போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

அவர்கள் காலை 7 மணி முதல் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுப்பப்பட்டனர். அரசியல் கட்சிகளின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பேனா, பேப்பர், பென்சில் போன்றவை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டனர். ஒவ்வொரு கட்சிக்கும் 16 முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

14 மேஜைகள்

முதற்கட்டமாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு ஆகியோர் முன்னிலையில் முதலில் தபால் ஓட்டு பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு அந்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறைகளிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு மின்னணு வாக்குகளை முகவர்கள் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரத்தை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பலகையில் சுற்று வாரியாக ஓட்டு விவரங்களை அதிகாரிகள் எழுதினர். தேர்தல் வாக்கு எண்ணும் பணியை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன், தி.மு.க. எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் வேட்பாளர்கள் சட்டமன்ற வாரியாக வாக்கு எண்ணும் பணியை பார்வையிட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வாக்குகள் எண்ணப்பட்டதை முன்னிட்டு ஓட்டு எண்ணும் மையமான சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் அறை அருகே மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு வரை நடைபெற்றது.

Next Story