துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி : ஹாசனில் பேரன் பிரஜ்வல் வெற்றி


துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி : ஹாசனில் பேரன் பிரஜ்வல் வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:30 PM GMT (Updated: 23 May 2019 9:35 PM GMT)

துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஹாசன் தொகுதியில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் வெற்றி பெற்றார்.

பெங்களூரு, 

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி வாகை சூடினார். வயதுமூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தேவேகவுடா கூறினார். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 7 தொகுதிகள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

தேவேகவுடா தனது சொந்த தொகுதியான ஹாசனை பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரசார் அழுத்தம் கொடுத்ததை அடுத்து தேவேகவுடா, துமகூரு தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டார்.

அவர் வெற்றி பெறுவார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறின. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பலம் வாய்ந்த அந்த தொகுதியில் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றார்.

தேவேகவுடா 5 லட்சத்து 81 ஆயிரத்து 624 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் 5 லட்சத்து 94 ஆயிரத்து 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 12 ஆயிரத்து 387 ஆகும்.

ஆனால் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பிரஜ்வல் ரேவண்ணா 6 லட்சத்து 76 ஆயிரத்து 606 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஏ.மஞ்சு 5 லட்சத்து 32 ஆயிரத்து 282 பெற்று தோல்வி அடைந்தார். அதாவது பிரஜ்வல் ரேவண்ணா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏ.மஞ்சுவை விட 1 லட்சத்து 41 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியால் விரக்தி அடைந்த தேவேகவுடா

நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் தான் தோல்வி அடைந்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா மிகவும் வேதனையுடன் உள்ளார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேவேகவுடா தோல்வி அடைந்திருந்தார். தற்போது இது அவருக்கு 2-வது தோல்வி ஆகும். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், கூட்டணி கட்சியான காங்கிரசும் படுதோல்வி அடைந்ததால் தேவேகவுடா மிகவும் விரக்தி அடைந்துள்ளார். ஏற்கனவே இதுதான் தனது கடைசி தேர்தல் என்று தேவேகவுடா சொல்லி வந்தார். தற்போது தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதால் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறும் நேரம் வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story