“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” - ஞானதிரவியம் எம்.பி. பேட்டி


“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” - ஞானதிரவியம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 10:28 PM GMT)

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்“ என ஞானதிரவியம் எம்.பி. கூறினார்.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நேற்று அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 ஓட்டுகள் பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு நேற்று இரவு தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷில்பா சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் ஞானதிரவியம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனக்கு எம்.பி. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். குறிப்பாக தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்துவேன்.

நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இணைப்பு சாலை திட்டத்தை கொண்டு வருவேன். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால திட்டத்தை நிறைவேற்றுவேன்.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் துரிதமாக செயல்பட நடவடிக்கை எடுப்பேன். கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், அதிக அளவு பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்வேன். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story