திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் - 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை நோட்டா அள்ளி, 6-வது இடத்தை பிடித்தது.
திருப்பூர்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு இடையேதான் கடும்போட்டி நிலவியது. ஆனால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் அரசியில் எது என்று கடும்போட்டி நிலவியது. அதாவது 3-வது இடத்தை பிடிக்க மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. ஆனாலும் அதை கடந்து மேற்கண்ட வேட்பாளர்கள் மீதோ, சுயேச்சை வேட்பாளர்கள் மீதோ நம்பிக்கை இல்லாமல் நோட்டாவிற்கு பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
அதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் 64,657 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வம் 43816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதா 42,189 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து 6-வதாக நோட்டாவில் 21,861 வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 3,772 வாக்குகளும், பவானி சட்டமன்ற தொகுதியில் 3,923 வாக்குகளும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 3,340 வாக்குகளும், கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 3,891 வாக்குகளும், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 4,278 வாக்குகளும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 2,578 வாக்குகளும், மேலும் தபால் ஓட்டுகளில் 79 நோட்டா ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. அதன்படி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 21,861 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருப்பது குறிப்பிட தக்கது.
அதாவது திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக நோட்டாவுக்கு 4,278 வாக்குகளும், குறைந்த பட்சமாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 2,578 வாக்குகளும் பதிவாகி உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த படியாக நோட்டா 6-வது இடத்தை பிடித்துள்ளது.
Related Tags :
Next Story