வந்தவாசி அருகே, சிதிலமடைந்த சிவன் கோவிலை புனரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
வந்தவாசி அருகே சிதிலமடைந்த சிவன் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா கீழ்வில்லிவலம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் சிதிலமடைந்த நிலையில் சிவன் கோவில் உள்ளது. கோவில் பகுதியில் இருந்த சிவலிங்கம், நந்தி மற்றும் சிலைகள் ஆகியவற்றை பொதுமக்கள் எடுத்து அருகே உள்ள இடத்தில் வைத்து தற்காலிகமாக கூரை அமைத்து கடந்த சில ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் பகுதியை கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் சுத்தம் செய்த போது கோவிலின் வலதுபுற அடிப்பகுதியில் சோழர் கால கல்வெட்டு, கல்லால் ஆன விளக்கு மற்றும் எண்ணை ஊற்றுவதற்கான கல்கரண்டி ஆகியவை கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டுகள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டு காலத்துக்குரியது ஆக இருக்கலாம்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் த.ம.பிரகாஷ், ச.பாலமுருகன், முனைவர் சுதாகர், வந்தவாசி மண்டல துணை தாசில்தார் அகத்தீஸ்வரன், வந்தவாசியை சேர்ந்த ஆசிரியர் சாமிகபிலன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கீழ்வில்லிவலம் கிராம பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு கீழ்வில்லிவலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.பெருமாள்ரெட்டியார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிதிலமடைந்த சிவன் கோவிலை புனரமைக்க தமிழக அரசையும், இந்து அறநிலையத்துறையையும் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிதிலமடைந்த சிவன் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story