குடியாத்தம் தொகுதியில், தி.மு.க.வேட்பாளர் எஸ்.காத்தவராயன் வெற்றி - அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்


குடியாத்தம் தொகுதியில், தி.மு.க.வேட்பாளர் எஸ்.காத்தவராயன் வெற்றி - அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்
x
தினத்தந்தி 23 May 2019 10:00 PM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காத்தவராயன் 27,841 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க.தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

வேலூர்,

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஓட்டு எண்ணிக்கையையொட்டி வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாலையிலேயே ஓட்டுஎண்ணும் மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த அறைகளின் சீல் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முதலில் தபால் ஓட்டுகளை எண்ணத்தொடங்கினர். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. குடியாத்தம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.காத்தவராயன், அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.மூர்த்தி, அ.ம.மு.க. வேட்பாளராக பி.ஜெயந்திபத்மநாபன், நாம்தமிழர் கட்சி சார்பில் ஆர்.கலையேந்திரி, ம.நீ.ம. வேட்பாளராக எஸ்.வெங்கடேசன் உள்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றிலேயே தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் 4,811 ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தியைவிட 550 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். 2-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி 4,261 ஓட்டுகள் பெற்று, தி.மு.க: வேட்பாளரைவிட 49 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.

அதன்பிறகு நடந்த அனைத்து சுற்றுகளிலும் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் அ.தி.மு.க. வேட்பாளரைவிட அதிக ஓட்டுகள் பெற்று கடைசிவரை தொடர்ந்து முன்னிலை வகித்தார். 21 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காத்தவராயன் 1,06,137 ஓட்டுகள் பெற்று 27,841 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்

2,70,751

பதிவானவை

2,03,959

எஸ்.காத்தவராயன் (தி.மு.க.) 1,06,137 (வெற்றி)

ஆர்.மூர்த்தி

(அ.தி.மு.க.) 78,296

பி.ஜெயந்தி பத்மநாபன்

(அ.ம.மு.க.) 8,186

ஆர்.கலையேந்திரி

(நாம் தமிழர்) 4,670

எஸ்.வெங்கடேசன்

(ம.நீ.ம.) 3,287

கே.முருகையன்

(சுயே.) 253

ஏ.சுப்பிரமணியன்

(சுயே.) 251

நோட்டா 2,838

செல்லாதவை 41

இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மூர்த்தியை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். மேலும் பல சுற்றுகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வெங்கடேசன் நோட்டாவைவிட குறைந்த ஓட்டுகளே பெற்றார்.

வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.காத்தவராயனுக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் அலுவலர் நந்தீஸ்வரன் வழங்கினார். அப்போது தேர்தல் பார்வையாளர் விபின் தலாட்டி உடனிருந்தார். 

Next Story