மதுரை தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம், தேனி தொகுதி தபால் ஓட்டுகள் மாறி வந்ததால் பரபரப்பு

தேனி தொகுதிக்கான தபால் ஓட்டுகள் மதுரைக்கு மாறி வந்ததால் மதுரை தொகுதிக்கான தபால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதேபோன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் மதுரை மருத்துவக்கல்லூரியில் தனியாக நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போது தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தபால் ஓட்டுகள், மதுரைக்கு மாறி வந்தது தெரியவந்தது.
இதனை பார்த்த அங்கிருந்த அனைத்துக்கட்சி முகவர்கள், தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. கட்சி முகவர்கள் வாக்குவாதம் செய்ததால் குழப்பம் நீடித்தது. இதனால் சுமார் அரை மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான நாகராஜன் உள்பட அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தபால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்திவைக்க கலெக்டர் நாகராஜன் அறிவுறுத்தினார். இதையடுத்து தபால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை சுற்று வாரியாக எண்ணும் பணி தொடங்கியது. தேனி தொகுதி தபால் ஓட்டுகள் மதுரைக்கு மாறி வந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சற்று நேரம் பரபரப்பு நீடித்தது.
Related Tags :
Next Story






