சேலத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்காக குழந்தையை கடத்திய தம்பதி உள்பட 3 பேர் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ரூ.1½ லட்சம் கடனை அடைப்பதற்காக குழந்தையை கடத்திய கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலம்,
சேலம் அரிசிபாளையம் முள்ளாக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி நித்யா. இவர்களது மகன் யோகேஸ்வரன்(வயது 3). கடந்த 22–ந்தேதி காலை குழந்தை யோகேஸ்வரன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஒரு சிறுமியை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் வந்தார்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அந்த பெண்ணும், அவருடன் வந்த சிறுமியும் சேர்ந்து கடத்திக்கொண்டு ஸ்கூட்டரில் வேகமாக சென்று விட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை பார்த்த அங்கிருந்த சிலர் கூச்சலிட்டனர். வீட்டில் இருந்த குழந்தையின் பெற்றோர் வெளியில் ஓடி வந்தனர். அப்போது தனது மகனை கடத்தி சென்ற சம்பவம் தெரிந்ததும் கூச்சலிட்டனர். பின்னர் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை கடத்தி சென்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட அவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் குழந்தையை சாலையோரம் இறக்கி விட்டு, சென்று விட்டனர். இதையடுத்து குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையை கடத்தி சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக பொன்னம்மாபேட்டை செங்கல் அணை பகுதியை சேர்ந்த வேலவன் (36), இவரது மனைவி ரேவதி (31) மற்றும் இவர்களது 13 வயதான மகள் ஆகிய 3 பேரை நேற்று செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1½ லட்சம் கடனை திருப்பி அடைப்பதற்காக குழந்தையை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–
சேலம் அரிசிபாளையம் முள்ளாகாடு பகுதியில் உள்ள பாலாஜியின் வீட்டு அருகே வேலவன் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வேலவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.1½ லட்சம் கடனில் சிக்கி தவித்து வந்தார். அப்போது பாலாஜியின் குழந்தை யோகேஸ்வரனை கடத்தி அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறித்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்த அவர் இது குறித்து தனது மனைவி ரேவதியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ரேவதி தனது மகளுடன் அரிசிபாளையம் பகுதிக்கு சென்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை யோகேஸ்வரனை கடத்தி சென்றார். பின்னர் பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரூ.3 லட்சம் கேட்டு 2 பேரும் மிரட்டி உள்ளனர். அப்போது போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் பயந்து கொண்டு கடத்திய குழந்தையை சேலத்தாம்பட்டி பகுதியில் சாலையில் விட்டு சென்று உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதைத்தொடர்ந்து குழந்தையை கடத்திய வேலவன், அவரது மனைவி ரேவதி, அவர்களது மகள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன், மனைவி இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.