சிறுபாக்கம் அருகே தீ விபத்து, 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
சிறுபாக்கம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அருகே உள்ள அரசங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் நல்லதம்பி (வயது 35) விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தன்னுடைய கூரை வீட்டில் இருந்தார். இந்த நிலையில் மதியம் 1.30 மணிக்கு மின்கசிவு காரணமாக நல்லதம்பியின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்து கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்தனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது நல்லதம்பியின் வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீயை அணைக்க முயன்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அருகில் இருந்த அஞ்சலை(50), தங்கவேல்(60) ஆகியோரது கூரை வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் 3 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சேதமானது.
இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story