மதுப்பழக்கத்தால் மனைவியுடன் தகராறு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுப்பழக்கத்தால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடத்தூர்,
கோபி காட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 27). கோபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரண்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மிதுன் (4) என்ற ஆண் குழந்தை உள்ளது.
வசந்தகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு செலவுக்கும் பணம் தராததால் சரண்யா இதுகுறித்து கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் இரவு வீட்டின் விட்டத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வசந்தகுமாரின் உடலை பார்த்து அவருடைய மனைவியும் மற்ற உறவினர்களும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.