திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 10 பேரின் டெபாசிட் பறிபோனது


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 10 பேரின் டெபாசிட் பறிபோனது
x
தினத்தந்தி 25 May 2019 4:15 AM IST (Updated: 25 May 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 10 பேரின் டெபாசிட் பறிபோனது.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இவர்களில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

3–வது இடத்தை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 64 ஆயிரத்து 657 ஆகும். அதற்கு அடுத்ததாக அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகள் பெற்று 4–வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகள் பெற்று 5–வது இடத்தையும் பெற்றனர். மற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றனர்.

ஒரு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளில் 6–ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் டெபாசிட் தொகை வேட்பாளருக்கு திரும்ப வழங்கப்படும். அவ்வாறு பெறாதவர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். அதன்படி பார்த்தால் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11,20,093. இதில் 6–ல் ஒரு பங்கு என்பது 1 லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் ஆகும். இந்த வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் பெற முடியும்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன், 2–வது இடம் பெற்ற அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகிய 2 பேர் மட்டுமே டெபாசிட்டை பெறுகிறார்கள். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்பட 10 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.


Next Story