மானாமதுரை அ.தி.மு.க.வின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் - வெற்றி பெற்ற நாகராஜன் பேட்டி


மானாமதுரை அ.தி.மு.க.வின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் - வெற்றி பெற்ற நாகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 May 2019 11:00 PM GMT (Updated: 24 May 2019 6:43 PM GMT)

மானாமதுரை அ.தி.மு.க.வின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று வெற்றி பெற்ற நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 8 ஆயிரத்து 194 வாக்குகள் வித்தியாசத்தில் நெட்டூர் நாகராஜன் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மானாமதுரை தொகுதியின் வளர்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன். முதல்-அமைச்சரின் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பொதுமக்களின் அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மானாமதுரை தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை என பொதுமக்கள் மீண்டும் நிரூபித்து, எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பொது மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது என்பதற்கு மக்கள் சான்று வழங்கியுள்ளனர். குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.

மானாமதுரை தொகுதி வேட்பாளரான எனது வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற ஒன்றிய, நகர், கிளை கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்பட அனைத்து தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் நகர் மக்களுக்கு விரைவில் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளேன்.

மக்கள் தங்களது பிரச்சினைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க குரல் கொடுப்பேன். சட்டமன்றத்தில் மானாமதுரை தொகுதிக்கு தேவையான திட்டங்களை கூறி அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த தொகுதி மக்களின் நன்மைக்காக எப்போதும் செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story