ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை 42 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய தி.மு.க.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை 42 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் குடியாத்தத்திலும் 18 ஆண்டுக்கு பிறகு வெற்றியை தி.மு.க.ருசித்தது.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் 96 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா 58 ஆயிரத்து 688 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு 1957-ம் ஆண்டு முதல் நடந்த தேர்தலில் ஆம்பூர் தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. அதைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டில் இருந்து 1976-ம் ஆண்டு வரை ஆம்பூர் தொகுதி தனி தொகுதியாக இருந்தது. 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வி.கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.முனிசாமி ஆகியோரும், 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த எம்.பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றனர்.
1977-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூர் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. பின்னர் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் 2009-ம் ஆண்டு ஆம்பூர் (பொது) தொகுதி மீண்டும் உருவானது. அப்போது நாடாளுமன்றத்துக்கு மட்டும் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த அஸ்லம்பாஷா வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.பாலசுப்பிரமணி வெற்றி பெற்றார். ஆர்.பாலசுப்பிரமணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி பெற்றார். 42 ஆண்டுகளுக்கு பிறகு ஆம்பூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
வாணியம்பாடி தொகுதியுடன் ஆம்பூர் இணைந்த பிறகு தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுக்குதான் தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது. ஆம்பூர் தொகுதி உருவாகிய பின்னரும் தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கே ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்து தலைமையிடம் ஆம்பூர் தொகுதியில் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி வந்தனர். அதன்படி தற்போது நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2 முறை ஆம்பூர் தொகுதியை கைப்பற்றிய தி.மு.க. தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆம்பூர் தொகுதியை கைப்பற்றி உள்ளது கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் குடியாத்தத்திலும் இடைத்தேர்தல் நடந்தது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியதால் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் உருவாகின. இத்தொகுதி ஆரம்பகாலத்தில் காங்கிரஸ், இந்திய பொதுவுடமை கட்சி ஆகியவற்றின் கோட்டையாக இருந்தது. 1962-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மணவாளனும், 1967-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வி.கே.கோதண்டராமனும், 1971-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைசாமியும் எம்.எல்.ஏ. ஆயினர்.
1977- ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வி.கே.கோதண்டராமனும், 1980-ல் சார்பில் கே.ஆர்.சுந்தரமும், 1984-ல் காங்கிரஸ் சார்பில் கோவிந்தசாமியும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து 1989-ல் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட தண்டாயுதபாணி எம்.எல்.ஏ.ஆனார். தொடர்ந்து 1996 தி.மு.க. சார்பில் வி.ஜி.தனபால் எம்.எல்.ஏ.ஆனார். அவர் 2001-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.ஆக இருந்தார். அதன்பிறகு கடந் 18 ஆண்டாக தி.மு.க.வெற்றிபெறவில்லை. 2001-ல் அ.தி.மு.க. சார்பில் சூரியகலாவும், 2006-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லதாவும், 2011-ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லிங்கமுத்துவும், 2016-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயந்திபத்மநாபனும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2011 மற்றும் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜமார்த்தாண்டன் தோல்வியடைந்தார். இந்த நிலையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் எஸ்.காத்தவராயன் வெற்றி பெற்றுள்ளார்.
1996-ம் ஆண்டு தி.மு.க.வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுக்கு பிறகு குடியாத்தம் தொகுதி வெற்றியை தி.மு.க.ருசித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தி.மு.க.வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story