பிளேடால் கழுத்தை அறுத்ததுடன் லேத் பட்டறை அதிபர் தூக்கு போட்டு சாவு; காதல் தோல்வி காரணமா?


பிளேடால் கழுத்தை அறுத்ததுடன் லேத் பட்டறை அதிபர் தூக்கு போட்டு சாவு; காதல் தோல்வி காரணமா?
x
தினத்தந்தி 24 May 2019 10:00 PM GMT (Updated: 24 May 2019 7:27 PM GMT)

வில்லியனூர் அருகே லேத் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்துக்கொண்டும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூர்,

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவருடைய மகன் ஜெய சந்துரு (வயது 22). இவர் அம்பத்தூரில் லேத் பட்டறை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே பொறையூரிலும் ஒரு லேத் பட்டறையை தொடங்கினார். இந்த பட்டறையை கவனிப்பதற்காக வடமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் லேத் பட்டறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பட்டறைக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் ஜெயசந்துருவை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் ஜெயசந்துரு தங்கியிருந்த வீட்டுக்கு சென்று அவர்கள் பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததில் ஜெயசந்துரு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு கிருபாகரன் மற்றும் போலீசார் ஆகியோர் அங்கு விரைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயசந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் கழுத்தில் பிளேடால் அறுத்ததற்கான காயமும் இருந்தது. எனவே அவர் தூக்குப் போடுவதற்கு முன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஜெயசந்துரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததும் தெரிய வந்தது. எனவே அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமாக இருக்கலாமா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story