நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்கிறார் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது
நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்கிறார். இதனால் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வைத்திலிங்கம். காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையொட்டி சபாநாயகராக பதவி வகித்து வந்தார்.
இந்த காலகட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், கவர்னரின் உத்தரவுகளை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திறம்பட கையாண்டார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டார். தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்றார். புதுவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில், அதாவது ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். விரைவில் வைத்திலிங்கம் எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.
அரசு ஆதாயம் பெறும் 2 பதவிகளை ஒருவர் வகிப்பது சட்ட விரோதம். அவ்வாறு 2 பதவி வகித்தால் ஏதாவது ஒரு பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்யவேண்டும் என்பது அரசியல் சட்டம்.
எனவே எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதும் காமராஜ் நகர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்படும். 6 மாத காலத்துக்குள் இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்படும்.