தோல்வி நிரந்தரம் அல்ல; மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
தேர்தலில் தோல்வி நிரந்தரம் அல்ல, மக்களுக்காக தொடர்ந்த பணியாற்றுவோம் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை,
மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை நாடாளுமன்ற தேர்தலிலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை பொறுத்தவரை இந்த தோல்வி தற்காலிகமானது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்த தோல்வியின் மூலம் நாங்கள் இன்னும் வலுபெறுவோம். இந்த தோல்வி நிரந்தரம் அல்ல. கடந்த 1980–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்பின் 3 மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சர் ஆனார். எனவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மதுரை அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூப்பிப்போம்.
பா.ஜனதா அரசு திட்டங்களை தருகிறது. அதனை மாநில அரசான அ.தி.மு.க. செயல்படுத்துகிறது. மதுரை மக்கள் இதனை புரியாமல் இருந்து விட்டார்கள். இருப்பினும் விரைவில் மக்களுக்கு இது புரியும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும், மத்திய மற்றும் மாநில அரசிடம் இருந்து திட்டங்களை பெற்று செயல்படுத்துவோம். அதில் எந்தவித தொய்வும் காட்டமாட்டோம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
வெற்றி பெற்ற கம்யூனிஸ்டு வேட்பாளரால் மதுரைக்கு ஒரு பலனும் கிடைக்க போவதில்லை. அவர் தேசிய கட்சியை சார்ந்தவர் என்று சொல்ல கூடாது. ஏனென்றால் கம்யூனிஸ்டு தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து விட்டது. நாடாளுமன்றத்தில் வெங்கடேசனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு எந்தளவுக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அவரால் ஆண்டுக்கு ரூ.5 கோடி எம்.பி. நிதியை மட்டும் நிழற்குடை போன்ற பணிகளுக்கு செலவு செய்ய முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
மதுரை தொழில் நகரமாக மாறி கொண்டு இருக்கிறது. அதனை தடுக்கும் பணியினை கம்யூனிஸ்டு வெங்கடேசன் செய்து விட வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே மதுரையில் பல தொழிற்சாலைகள் கம்யூனிஸ்டு கட்சி சங்கங்களால் தான் மூடப்பட்டது. அது போன்று ஒரு நிலை மீண்டும் ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்துள்ளனர். தினகரன் பார்வர்டு பிளாக் போன்று ஒரு கட்சியை நடத்தலாம். தினகரனின் நோக்கமே அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதாக உள்ளது. அவரது எண்ணம் என்றுமே நிறைவேறாது. எனவே தினகரன் பின்னால் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வர வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும், தான் முதல்–அமைச்சராகி விடுவேன் என்றும் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. அதேபோல் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஆகியோர் மத்திய அமைச்சராகி விடுவோம் என்ற கனவில் இருந்தனர். ஆனால் அவர்களது கனவில் மண் விழுந்து விட்டது. எனவே தி.மு.க. வெற்றியால் அவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஒரு பலனும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ராஜ்சத்யன், முனியாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.