கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்விக்கு காரணம் என்ன?


கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்விக்கு காரணம் என்ன?
x
தினத்தந்தி 25 May 2019 5:00 AM IST (Updated: 25 May 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்தது.

காங்கிரஸ் 21 தொகுதியிலும், ஜனதா தளம் (எஸ்) 7 தொகுதியிலும் போட்டியிட்டன. இந்த கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி கணக்குப்படி 18 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் கணக்கு போட்டனர். இந்த கூட்டணி காரணமாக பா.ஜனதா சற்று பயந்துபோய் இருந்தது. இந்த முறை பா.ஜனதாவுக்கு 10 முதல் 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

கூட்டணியின் வெற்றியை சிதைக்க பிரதமர் மோடி கர்நாடகத்தில் அதிக இடங்களில் பிரசாரம் செய்தார். ஏழைகள் தான் ராணுவத்தில் சேருவதாக குமாரசாமி கூறிய கருத்தை, கையில் எடுத்து மோடி பேசினார். அது குமாரசாமிக்கு எதிராக திரும்பியது. இது பா.ஜனதாவின் அமோக வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

மேலும் பா.ஜனதாவின் வெற்றிக்கு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் நீடித்த குழப்பமும் ஒரு காரணமாக அமைந்தது. மண்டியா தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு தேர்தல் பணியாற்ற முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்தனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், அவர்களின் உதவி தேவை இல்லை என்றும் குமாரசாமி பேசினார். அதனால் அந்த தொகுதியில் பெருவாரியான காங்கிரஸ் வாக்குகள் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு சென்றுவிட்டதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

அதே போல் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே, மைசூரு தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக அக்கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா பகிரங்கமாக கூறினார். இதன் மூலம் அந்த தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பெருவாரியான வாக்குகள் பா.ஜனதாவுக்கு சென்றது உறுதியானது.

இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பலம் வாய்ந்த மைசூரு தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. தேவேகவுடா போட்டியிட்ட துமகூரு தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. அந்த தொகுதியில் முத்தஹனுமேகவுடா, எம்.பி.யாக இருந்தார்.

ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்காமல் அந்த தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் முத்தஹனுமேகவுடா போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்றார்.

ஆனால் அவர் தேவேகவுடாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜண்ணா மதுகிரி தொகுதியில் பலம் வாய்ந்த தலைவர். அவரும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவாக பணியாற்றவில்ைல என்று சொல்லப்படுகிறது. இதனால் தேவேகவுடா தோல்வி அடைந்தார் என்று கூறுகிறார்கள்.

கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் அடிமட்டத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் ஒன்றுபட்டு செயல்படாததால், கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு முதலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தகுந்த வேட்பாளர் இல்லை என்று கூறி ஒரு தொகுதியை அக்கட்சி காங்கிரசுக்கே வழங்கிவிட்டது. உடுப்பி தொகுதியில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரமோத் மத்வராஜ் ஜனதா தளம் (எஸ்) தொகுதியில் களம் இறக்கப்பட்டார்.

அங்கும் அக்கட்சிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளதாக கர்நாடக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


Next Story