தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி
தேவேகவுடாவுக்காக எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவருடைய பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கூறினார்.
ஹாசன்,
நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். ஹாசன் தொகுதி தேவேகவுடாவின் தொகுதி ஆகும்.
அவர் தனது பேரனுக்காக அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார். பின்னர் அவர் துமகூரு தொகுதியில் களம் இறங்கினார். ஆனால் அவர் அங்கு தோல்வியை தழுவினார். துமகூரு உள்பட ஜனதா தளம்(எஸ்) கட்சி தான் போட்டியிட்ட 6 இடங்களில் தோல்வியை தழுவியது. ஹாசன் தொகுதியில் மட்டும் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அவர் ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று புதிய எம்.பி.யாகி உள்ள நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். யாருக்கும் பயந்து நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவில்லை.
அப்படி யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். தேவேகவுடாதான் நமது கட்சியின் உயிர். தேவேகவுடாவுக்காக நான் எனது பதவியை ராஜினாமா செய்து, இத்தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். அவருடைய சக்தி இந்த நாட்டுக்கு தேவை. தேவேகவுடாவின் ராஜாங்க பதவியை பறித்துக் கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை.
நான் இன்று(அதாவது நேற்று) எனது தாத்தா தேவேகவுடாவை நேரில் சந்தித்தேன். அப்போது நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன். தற்போது நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். உங்களுக்காக இத்தொகுதியை விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறினேன்.
அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றதன் மூலம் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், எனது ஆதரவாளர்களும் சந்தோஷம் அடைந்தனர். குறிப்பாக எனது குடும்பத்தினர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். வாக்காளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். இந்த வெற்றி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனதா தளம்(எஸ்)-காங்கிரசாருக்கு கிடைத்த வெற்றி. குறிப்பாக தேவேகவுடாவின் வெற்றி. இங்கு இருப்பது அவருடைய சக்தி.
போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கை என்று தேவேகவுடா கூறியிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். துமகூருவுக்காக தேவேகவுடா சிறந்த பங்களிப்பை ஆற்ற இருந்தார். ஆனால் துமகூருவில் இருந்தவர்கள் தேவேகவுடா குறித்து அவதூறு பரப்பி விட்டார்கள்.
துமகூருவுக்கு ஹேமாவதி ஆற்று நீரை கொண்டு வந்தவர் தேவேகவுடா. அதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு பிரஜ்வல் ரேவண்ணா கூறினார்.