கூட்டணி அரசை கவிழ்க்க அனுமதிக்க மாட்டோம் : ஆலோசனை கூட்டத்திற்கு பின் பரமேஸ்வர் பேட்டி
முதல்-மந்திரி குமாரசாமி மீது மந்திரிகள் நம்பிக்கை வெளிபடுத்தினர் என்றும், கூட்டணி அரசை கவிழ்க்க அனுமதிக்க மாட்டோம் என்றும் மந்திரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் அக்கட்சி முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இமாலய வெற்றியை, அதாவது 25 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மீண்டும் களம் இறங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இதில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் அடைந்த தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிவு, மத்திய அரசுக்கு தொடர்புடையது. கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசு கடந்த 2018-ம் ஆண்டு அமைந்தது. அப்போது மக்கள் அளித்த தீர்ப்பின்படி இந்த அரசு அமைந்துள்ளது.
இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்துகொண்டு குமாரசாமி தலைமையிலான அரசு மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்த அரசு உறுதியாக உள்ளது. ஆட்சியை தொடர்ந்து நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் இந்த கூட்டணி அரசு இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும்.
இந்த அரசை கவிழ்க்க எதிர்க்கட்சி (பா.ஜனதா) முயற்சி செய்கிறது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிப்போம். எக்காரணம் கொண்டும் ஆட்சி கவிழ அனுமதிக்க மாட்டோம். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக உள்ளனர்.
நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கூட்டணி அரசு தொடர வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையாவும் ஆலோசனை கூறியிருக்கிறார்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, முதல்-மந்திரி குமாரசாமி உடன் இருந்தார். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அவர் நிருபர்களிடம் பேச மாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் மந்திரிகள் சிலர் பேசுகையில், “சித்தராமையா மற்றும் குமாரசாமி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை போல் செய்திகள் வெளியாகுவதால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அனுமதிக்கக்கூடாது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.