தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் வேலுச்சாமியும், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவனும் வென்றனர்


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் வேலுச்சாமியும், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவனும் வென்றனர்
x
தினத்தந்தி 24 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 12:12 AM GMT)

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் வேலுச்சாமியும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனும் வெற்றி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.வேலுச்சாமி வெற்றி பெற்றார். இவர், தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 46 ஆயிரத்து 523 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதனால் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இது அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்குகள் 15 லட்சத்து 40 ஆயிரத்து 495 ஆகும். அதில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 931 வாக்குகள் பதிவாகின. இதில் சுமார் 70 சதவீத வாக்குகளை தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி அள்ளினார். இதனால் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர், என்ற சிறப்பையும் பி.வேலுச்சாமி பெற்றுள்ளார். பி.வேலுச்சாமியை பொறுத்தவரை தி.மு.க.வில் கட்சி உறுப்பினரை தவிர பெரிய அளவில் எந்த பொறுப்பிலும் இல்லை. எனினும், தி.மு.க. தலைமையின் நம்பிக்கையை பெற்றவராக விளங்கியதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் களம் கண்டு வெற்றிக்கனியை பறித்து தலைமைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேலுச்சாமி வெற்றி பெற்ற அதே நேரம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும், அ.ம.மு.க. சார்பில் இளவரசன் என மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியில் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story