குஜிலியம்பாறை, ராமகிரி ரேஷன் கடைகளில், ரூ.3 லட்சம் கையாடல் செய்த விற்பனையாளர் கைது
குஜிலியம்பாறை மற்றும் ராமகிரி ரேஷன் கடைகளில் விற்பனை தொகை ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டின் கீழ், குஜிலியம்பாறை, ராமகிரி ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ராமகிரியில் செயல்படும் ரேஷன் கடையில் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 30) விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் குஜிலியம்பாறை ரேஷன் கடையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்த 2 ரேஷன் கடைகளின் விற்பனை தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு 2 ரேஷன் கடைகளின் விற்பனை தொகையை செலுத்தாமல் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆரோக்கியராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், குஜிலியம்பாறை சரக கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ரேஷன் கடைகளின் விற்பனை தொகை ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 280-ஐ ஆரோக்கியராஜ் கையாடல் செய்தது நிரூபணம் ஆனது.
இதையடுத்து விற்பனையாளர் ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் இளமதி, திண்டுக்கல் வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story