மைசூருவில் இருந்து குன்னூருக்கு கடத்தி வந்த 5 டன் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை


மைசூருவில் இருந்து குன்னூருக்கு கடத்தி வந்த 5 டன் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 12:13 AM GMT)

மைசூருவில் இருந்து குன்னூருக்கு கடத்தி வந்த 5 டன் கலப்பட தேயிலைத்தூளை தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி, 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வரும் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச்சாவடி அமைந்து உள்ளது. இதில் முன்னாள் ராணுவத்தினர் நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் பணி மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவோருக்கு அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சரக்கு ஏற்றி வந்த லாரியை அங்கு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன், ஜான்சி ராணி ஆகியோர் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்காக நிறுத்தி உள்ளனர்.

அப்போது அங்கிருந்த போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக கலப்பட தேயிலைத்தூள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் கேட்டபோது இதனை குன்னூருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து கோத்தகிரி தேயிலை வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, கோத்தகிரி தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் பாரதிராஜா மற்றும் சுமி குப்தா ஆகியோர் குஞ்சப்பனை சோதனைச்சாவடிக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் இருந்த லாரியை ஆய்வு செய்தனர். அதில் 5 டன் கலப்பட தேயிலைத்தூள் இருந்தது.

மேலும் 100 மூட்டைகளில் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்கான மூலப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து குன்னூர் தேயிலை வாரியத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் மைசூருவில் இருந்து மேட்டுப்பாளையம் நாலுரோடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேறு லாரியில் மாற்றி கோத்தகிரி வழியாக குன்னூருக்கு கொண்டு சென்று உள்ளனர். லாரியை ஊட்டி கர்சன்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் மைசூருவை சேர்ந்த ரவுங்கா (வயது 29) என்பவரும் வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் கொண்டுவரப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கலப்பட தேயிலைத்தூள் எந்த தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது என தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தேயிலை தொழிற்சாலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story