சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்தது போளிப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி டேங்க் ஆபரேட்டர், ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை பிள்ளையார் குப்பம் கூட்ரோடு அருகே சோளிங்கர் – பாணாவரம் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கிராமத்திற்கு சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெபராஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், உங்கள் பகுதியில் உடனடியாக புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதாக கூறினார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.