திற்பரப்பு அருகே சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது மறந்து வைத்த செல்போனால் சிக்கினான்


திற்பரப்பு அருகே சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது மறந்து வைத்த செல்போனால் சிக்கினான்
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 2:42 PM GMT)

குலசேகரம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.60 ஆயிரம் கொள்ளையடித்த வாலிபர் மறந்து வைத்த செல்போனால் சிக்கினான். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குலசேகரம்,

திற்பரப்பு அருகே பிணந்தோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் எபநேசர் (வயது 50), பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவர் பிணந்தோடு சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது, முன்பக்க ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் மாயமாகி இருந்தது. மேலும், கடையின் உள்ளே ஒரு செல்போனும் கிடந்தது. கொள்ளையர்கள் இரவில் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு, தங்களை அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் போன்ற உபகரணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். ஆனால், தப்பி செல்லும்போது ஒருவன் செல்போனை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளான்.

போலீசார் அந்த செல்போன் மூலம் துப்புதுலக்க தொடங்கினர். விசாரணையில் அந்த செல்போன் களியல் பகுதியை சேர்ந்த சஜூ (30) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. தொடர்ந்து அவனை தேடியபோது, திற்பரப்பில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

மேலும், கொள்ளையில் ஈடுபட்ட போது ‌ஷட்டர் விழுந்து அவனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயத்திற்கு சிகிச்சை பெற ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது, போலீசார் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர், அவனை குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொள்ளையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story