குமரி மாவட்டத்தில் இடி–மின்னலுடன் மழை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 65 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் இடி–மின்னலுடன் மழை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 65 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 2:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் பதிவாகியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனாலும் மேற்கு மாவட்ட பகுதிகளில் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல சற்று பலத்த மழையாக பெய்தது. இதனால், செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, கே.பி. ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோர்ட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடையும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. தண்ணீரில் குப்பைகளும் அடித்து செல்லப்பட்டன. மழை நின்றதும் குப்பைகள் ஆங்காங்கே கிடந்ததால் சாலை எங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 65 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில் 8.8, களியல்–12.4, குழித்துறை–3, திற்பரப்பு–6.2, புத்தன்அணை–56.4, சுருளோடு–31, குளச்சல்–6.4, இரணியல்–1.2, பாலமோர்–2.6, கோழிப்போர்விளை–23, அடையாமடை–7, ஆனைகிடங்கு–48.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை–26.4, பெருஞ்சாணி–58, சிற்றார் 1–62.2 சிற்றார் 2–31.4, முக்கடல்–3.5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகிறது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அதே சமயம் அணையில் இருந்து 63 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மலையோரம் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில்  மிதமான தண்ணீர் பாய்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டனர். மேலும் அணையின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Next Story