வெவ்வேறு சம்பவங்களில் தபால்காரர் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் தபால்காரர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2019 6:26 PM GMT (Updated: 25 May 2019 6:26 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் தபால்காரர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் வேலாயுதம் (வயது 48). இவர் கோரம்பள்ளம் தபால்நிலையத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு பரமேசுவரி என்ற மனைவியும், 19 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கணேசன் வேலாயுதத்தின் மகன் சாத்தூரில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வாய் பேசமுடியாது. இதனை நினைத்து கணேசன் வேலாயுதம் மனவேதனையில் இருந்து வந்தார்.

கடந்த 22-ந்தேதி பரமேசுவரி தனது மகன், மகளுடன் சென்னையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கணேசன் வேலாயுதம் நேற்று முன்தினம் இரவு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை சேர்ந்த போஸ் மற்றும் அவருடைய மகன் ரமேஷ் (31) ஆகிய 2 பேரும் தொழிலாளர் களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை போஸ் கண்டித்தார். இதில் மனமுடைந்த ரமேஷ் கல்லாமொழி கடற்கரை பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கூடங்குளம் கடலோர குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டி மல்லாகோட்டையை சேர்ந்தவர் அழகப்பன் (49). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேலமங்கலகுறிச்சியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தனது மனைவியுடன் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அழகப்பன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு தகராறு ஏற்பட்டது. இதில் அழகப்பனின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அழகப்பன் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அழகப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story