கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலேரி, கூச்சுவாடி, இருதுகோட்டை, அய்யூர், உனிசெட்டி, காமசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தன. மேலும் அந்த பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த கோஸ், பீன்ஸ், தக்காளி போன்ற பயிர்களும் சேதமடைந்தன. இந்த மழையால் அங்கு மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் வயல்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் பலத்த இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது.
மேலும், ஓசூர், பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, ஆவல்நத்தம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்திற்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நேற்று திடீரென சூறாவளிக்காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த மழையின்போது காளிப்பேட்டை புதூர் பகுதியில் பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் உள்ள சாமுவேல் என்பவரது வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் முரளி என்பவரின் வீட்டில் மீது மின் கம்பம் விழுந்தது. இதில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தன.
மேலும் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகளில் இருந்த மின்விசிறிகள் சேதமடைந்தன. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்று பென்னாகரம், ஏரியூர், பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
Related Tags :
Next Story