குளித்தலை மகா மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா


குளித்தலை மகா மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 7:33 PM GMT)

குளித்தலை மகாமாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி கம்பம் நடப்பட்டு, பூச்சொரிதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினந் தோறும் ஏராளமானோர் அதிகாலையில் காவிரி ஆற்றில் நீராடி புனித நீர் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து தினமும் காவிரி நதிக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்தக் குடம், தீச்சட்டி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து 21-ந்தேதி தேரோட்டமும், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், பின்னர் அரண்மனை மாவிளக்கு போடும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

கம்பம் ஆற்றில் விடும் விழா

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. இதையொட்டி மகாமாரியம்மன் கோவிலில் நடப்பட்ட கம்பத்துக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் அலங் கரிக்கப்பட்ட கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெரியபாலம் காவிரிக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆற்றில் விடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை போலீசார் செய்திருந்தனர். 

Next Story