ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 8:10 PM GMT)

எருக்கூரில் ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நவீன தானியங்கி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கொண்டு வந்து ஊற வைத்து உலர்த்தப்படும். பின்னர் அரிசியாக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆலையில், கடந்த 2017-ம் ஆண்டு நெல் மூட்டைகள் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப்போகாமல் இருக்கவும், சேதம் ஏற்படாமல் பாதுகாக்கவும் நவீன தானியங்கி நெல் சேமிப்பு கிடங்கு ரூ.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இது 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டது. இந்த நவீன தானியங்கி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் தானாகவே உலரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை நெல் சேமிப்பு கிடங்கு செயல்படாமல் பயனற்று உள்ளது. இதுவரை ஒரு மூட்டை நெல் கூட இங்கு சேமித்து வைக்கப்படவில்லை.

நெல் மூட்டைகள் சேதம்

இந்த சேமிப்பு கிடங்கு செயல்படாமல் இருப்பதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியிலேயே மாதக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்மூட்டைகள் சேதம் மற்றும் எடை இழப்பு ஏற்பட்டு நஷ்டமாகிறது.

எனவே, எருக்கூரில் உள்ள நவீன தானியங்கி நெல் சேமிப்பு கிடங்கு உடனே செயல்பாட்டுக்கு வருமா? என்று நாகை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story