பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு கார் டிரைவர் தற்கொலை முயற்சி


பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு கார் டிரைவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 26 May 2019 4:30 AM IST (Updated: 26 May 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு கார் டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து. இவருடைய மகன் செல்வம்(வயது35). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பாநாடு சோழகன்கரை சாலையில் காரில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற போலீசார் டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். இதனால் போலீசாருக்கும் செல்வத்துக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் செல்வத்தின் உறவினர்கள் நேற்று காலை பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று செல்வத்தை போலீசார் தாக்கியதாக கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே டிரைவர் செல்வம் கையில் கயிறுடன் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பிறகு அவர் போலீசார் தன்னை தாக்கியதாக கூறி போலீஸ் நிலையம் எதிரே உள்ள பூவரசு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் செல்வத்தை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் ஒருவர் போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பாப்பாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story