கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண்கள் உள்பட 4 பேர் கைது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 4:30 AM IST (Updated: 26 May 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

ரெயில், டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி, மண்எண்ணெய் போன்றவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூரை அடுத்த பள்ளம் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வந்தது. அதில் துடைப்பங்களாக இருந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, ரேஷன் அரிசி மூடைகள் மீது துடைப்பத்தை வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. சிறு, சிறு மூடைகளாக 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை, டெம்போவுடன் போலீசார் பறிமுதல் செய்து, டெம்போ டிரைவர் மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த தங்கமணி(வயது 48). மற்றும் தெற்கு சூரங்குடி சாமிநாதன்(50) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 600 கிலோ ரேஷன் அரிசி சிறு, சிறு மூடைகளாக இருந்தன. அவற்றை புத்தளம் பகுதியை சேர்ந்த மனோன் மணி (56) மற்றும் மேல்புறம் மெல்சி (58) ஆகியோர் ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனோன் மணி, மெல்சி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 300 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 1,950 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து, 2 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

Next Story