ஈரோட்டில் நள்ளிரவில் ரேஸ்: நிலைதடுமாறிய கார் மோதி காவலாளி பலி மேலும் ஒருவர் படுகாயம்


ஈரோட்டில் நள்ளிரவில் ரேஸ்: நிலைதடுமாறிய கார் மோதி காவலாளி பலி மேலும் ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 26 May 2019 5:15 AM IST (Updated: 26 May 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த கார் ரேசில், நிலைதடுமாறிய கார் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு,

ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 55). இவர் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜலிங்கம் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40) ஆகியோர் காவலாளிகளாக வேலை பார்த்தனர். நள்ளிரவில் இவர்கள் 2 பேரும் கடையின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் இருந்து காவிரி ரோடு நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது.

இந்த கார் நகைக்கடையின் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. பின்னர் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் காரை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோட்டில் நள்ளிரவில் கார் ரேஸ் நடந்ததாகவும், இதில் ஒரு கார் நிலைதடுமாறி 2 காவலாளிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story