கோபி அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி; போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபர் படுகாயம்


கோபி அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி; போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 25 May 2019 11:15 PM GMT (Updated: 25 May 2019 9:20 PM GMT)

கோபி அருகே மரத்தில் கார் மோதியதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியானார். போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபரும் படுகாயம் அடைந்தார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரியை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராபர்ட் ( வயது 56). இவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்காக கெட்டிச்செவியூருக்கு காரில் சென்றார். அவருடன் போலீஸ் நண்பராக அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் உடன் சென்றிருந்தார். பின்னர் ரோந்து முடிந்து இருவரும் கெட்டிச்செவியூரில் இருந்து கொளப்பலூருக்கு நேற்று அதிகாலை காரில் வந்துகொண்டு இருந்தார்கள். காரை ஜேம்ஸ்ராபர்ட் ஓட்டினார்.

இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் கார் கொளப்பலூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தில் வந்துகொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஜேம்ஸ்ராபர்ட்டும், கார்த்திகேயனும் படுகாயம் அடைந்தார்கள்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே ஜேம்ஸ்ராபர்ட் இறந்துவிட்டார். கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், சிறுவலூர் போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, ஜேம்ஸ்ராபர்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த ஜேம்ஸ்ராபர்ட்டுக்கு செலன்ரோசலின் (54) என்ற மனைவியும், சிபிஇன்சன்டா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் ஜேம்ஸ்ராபர்ட்டின் உடலை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

இரவு ரோந்து பணிக்கு சென்ற போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானது ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story