திருப்பூர் மாவட்டத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூர் மாவட்டத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 9:37 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பி.என்.ரோடு, கொங்கு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பைகள், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 1¾ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 9 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்தக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.

சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சேவூர் கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, புளியம்பட்டி சாலை ஆகிய பகுதிகளிலும், முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர், அசநல்லி பாளையம் சாலை, முறியாண்டம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சிகடைகள், ஜவுளி கடைகள், தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகளில், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று இப்பகுதியில் உள்ள 58 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மொத்தம் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் ரூ.8,100 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் சேவூர் ஊராட்சியில் மொத்தம் ரூ.15,200 வசூலிக்கப்பட்டது.

பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் 3 பிரிவுகளாக ஊராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தியதில் 140 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த சோதனையில் துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி, ஊராட்சி செயலாளர்கள் மகேஷ், தமிழரசன், செந்தில் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதி லட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி பகுதியில் மளிகை கடைகள், இறைச்சிக்கடை ,பேக்கரி, ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது இதையடுத்து 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டு கடைக்காரர்களுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story