ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன் - நவாஸ்கனி எம்.பி. பேட்டி
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன் என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தெரிவித்தார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி நிருபர்களிடம் கூறியதாவது:– தி.மு.க. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றி பெறச்செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மக்களிடம் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற கடுமையாக பாடுபடுவேன். மாவட்டத்தில் நிலவுகிற குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்வேன். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன்.
தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். விரைவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். நாங்கள் மதசார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர். அதை மக்கள் நிறைவேற்றி உள்ளனர். குறிப்பாக மக்கள் மத்தியில் குடிநீர் பிரச்சினை, பெண்கள் மத்தியில் கியாஸ் விலை உயர்வு, இளைஞர்கள் மத்தியில் பெட்ரோல் விலை உயர்வு போன்றவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். தொகுதியில் தொழிற்சாலை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்தந்த தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து குறைகளை போக்க பாடுபடுவேன். கடந்த கால செயல்முறைக்கும் என்னுடைய களப்பணிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். இந்த தொகுதியில் நான் பிரசாரம் செய்ய சென்றபோது சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாத நிலையை நேரடியாக பார்க்க முடிந்தது. பொதுமக்களும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு என்னிடம் கேட்டக்கொண்டனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அனைத்து வசதிகளையும் நிறைவேற்றுவேன். மேலும் என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ஏராளமான பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன். இதுதவிர நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கு குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.