ராமேசுவரம் கடல் பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு
மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க ராமேசுவரம் கடல் பகுதியில் ஆள் இல்லாத விமானம் மற்றும் கடற்படையின் போர்க்கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 300–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்பு தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள ராமேசுவரம் கடல் பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக ராமேசுவரம்,தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதிகளில் சென்னயில் உள்ள இந்திய கடற்படையின் அதிவேக ரோந்து கப்பல் ஒன்றும்,இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பலும் ஆழ்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதைதவிர உச்சிப்புளியில் உள்ள பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து தினமும் ஆள் இல்லாத விமானமும் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றும் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.நடுக் கடலில் பாதுகாப்பில் உள்ள கப்பலில் உள்ள ரேடார்கள் மூலம் இந்திய கடல் பகுதிகளில் சந்தேகப்படும் படியான படகுகள் ஏதும் வருகிறதா என்று கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரும் 3 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் மூலம் மண்டபம், பாம்பன், ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் இரவு –பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம்,தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் கடலோர போலீசாரும்,கியூ பிரிவு போலீசாரும் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன் சந்தேகப்படும் படியான நபர்களை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மீனவர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.