ஸ்ரீவில்லிபுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் தீப்பிடித்தது பல கோடி ரூபாய் தப்பியது
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் தீப்பிடித்ததில், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின. ஆனால் பல கோடி ரூபாய் தப்பியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைக்குளம் தெருவில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பின்புற பகுதியில் உள்ள தெருவில் குப்பைக் கழிவுகளில் தீ எரிந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் எதிர்பாராவிதமாக குப்பை கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீ, அருகே இருந்த கூட்டுறவு வங்கி பகுதிக்கும் பரவியது. இதனால் வங்கியில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் வங்கியின் ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையிலும் தீப்பிடித்து கொண்டதால் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வங்கியில் பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் அங்கிருந்த பல கோடி ரூபாய் தீயில் இருந்து தப்பியது. தீ விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.