விருதுநகரில் இருந்து 250 சமையல் கியாஸ் இணைப்புகள் கள்ளிக்குடிக்கு மாற்றம் பொதுமக்கள் பாதிப்பு
விருதுநகர் வடக்கு பகுதியில் இருந்து 250 சமையல் கியாஸ் இணைப்புகள் கள்ளிக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் வடக்கு பகுதியில் உள்ள கணேஷ்நகர், வேலுச்சாமிநகர், என்.ஜி.ஓ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250 சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தற்போது திடீரென இந்த இணைப்புகள் 15 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு சமையல் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு சிலிண்டர் தேவை என தகவல் தெரிவித்தாலும், முறையான பதில் கிடைக்காத நிலையில் அப்படி தகவல் கிடைத்து அவர்கள் சிலிண்டர் கொண்டு வந்தாலும் வெகுதூரத்தில் இருந்து கொண்டு வருவதால் சிலிண்டர் விலையில் இருந்து ரூ.100 கூடுதலாக தர வேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்தம் செய்யும் நிலை உள்ளது.
இல்லையேல் சிலிண்டர் தேவைப்படுவோர் கள்ளிக்குடிக்கு வந்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளுமாறு அந்த ஏஜென்சி நிறுவனத்தினர் வற்புறுத்தும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட வழங்கல்துறை விருதுநகரில் இருந்து கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள 250 சமையல் கியாஸ் இணைப்புகளை மீண்டும் விருதுநகருக்கே மாற்றி பிரச்சினைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.