விருதுநகர், சாத்தூர் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்த அ.ம.மு.க. வேட்பாளர்கள்


விருதுநகர், சாத்தூர் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்த அ.ம.மு.க. வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 25 May 2019 10:31 PM GMT (Updated: 2019-05-26T04:01:53+05:30)

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும், இடைத்தேர்தல் நடந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க அ.ம.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளே காரணமாக அமைந்துள்ளன.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 44 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2–வது இடத்தை பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி 29.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். 3–வது இடத்தை பெற்ற அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 10.05 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை விட தற்போது இத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகர்சாமிக்கு 90,365 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது. அதே நேரத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 1 லட்சத்து 7 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் பிரித்த வாக்குகளே, மாணிக்கம்தாகூர் வெற்றிக்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.

சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் 76,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2–வது இடத்தை பெற்ற தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் 76,521 வாக்குகளையும், 3–வது இடத்தை பெற்ற அ.ம.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியம் 12,511 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இத்தொகுதியை பொருத்தமட்டில் அ.ம.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியம் டெபாசிட் பெற முடியாத அளவுக்கு குறைந்த வாக்குகள் பெற்றது அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில் விருதுநகர், சாத்தூர் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை அ.ம.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிர்ணயித்துள்ளன.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க.வேட்பாளர் அழகர்சாமியை தவிர அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவம் அய்யப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி உள்பட களத்தில் நின்ற 26 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோன்று சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட 30 பேரில் அ.ம.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியம், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுந்தரராஜ் உள்பட 28 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சி பகுதியில் 69 வாக்குசாவடிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் நகராட்சி பகுதியில் உள்ள 69 வாக்குச்சாவடிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு 19,053 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமிக்கு 9,766 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு, தே.மு.தி.க.வேட்பாளர் அழகர்சாமியை விட 9,287 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது.

இத்தொகுதியில் பதிவான 10,584 தபால் வாக்குகளில் 1,191 வாக்குகள் செல்லாமல் போனது. 205 வாக்குகள் நோட்டாவுக்கு போடப்பட்டுள்ளது. இதனால் செல்லுபடியான 9,188 வாக்குகளில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளருக்கு 1,274 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு 6,216 வாக்குகள் கிடைத்துள்ளது. தபால் வாக்குகள் அளித்த அரசு ஊழியர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு மிக குறைந்த வாக்குகளையே அளித்துள்ளனர்.


Next Story