குருபரப்பள்ளி அருகே கர்நாடக பஸ் மீது சரக்கு வேன் மோதல்: டிரைவர், தொழிலாளி பரிதாப சாவு பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்


குருபரப்பள்ளி அருகே கர்நாடக பஸ் மீது சரக்கு வேன் மோதல்: டிரைவர், தொழிலாளி பரிதாப சாவு பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 3:18 PM GMT)

குருபரப்பள்ளி அருகே கர்நாடக அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த பீர்பள்ளி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி மற்றும் கத்தரிக்காயை ஏற்றி கொண்டு, கிருஷ்ணகிரி மார்க்கெட்டிற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் சரக்கு வேன் ஒன்று புறப்பட்டது. இந்த வேனை சூளகிரியை அடுத்த பீர்பள்ளி அருகே உள்ள மல்லசந்திரம் பகுதியை சேர்ந்த மாது (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். இதில் பெரியகுதிபாலா பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (48), ரங்கன் (60), காமராஜ் (40), ராஜசேகர் (40), ராஜன் (44), சரோஜா (50), மங்கம்மா (35), ஆகிய 7 தொழிலாளர்கள் இருந்தனர்.

ஓசூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி மேம்பாலத்தில் ஏறுவதற்கு சற்று முன்பாக, நள்ளிரவு சரக்கு வேன் சென்றது. அப்போது, முன்னால் சென்ற கர்நாடக மாநில அரசு பஸ் மீது வேன் மோதியது. இந்த விபத்தில், ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் டிரைவர் மாது, ரங்கன், காமராஜ், ராஜசேகர், ராஜன், சரோஜா, மங்கம்மா ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் மாது சிறிது நேரத்தில் பலியானார். ரங்கன் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story