ஆம்பூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்


ஆம்பூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 26 May 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

ஆம்பூர், 

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி விவிதா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜசேகர் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும், மேலும் ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விவிதா ஆம்பூர் சிவராஜபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் ராஜசேகர் அங்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது பஞ்சாயத்து பேசி மனைவியிடம் தகராறு செய்யமாட்டேன் என கூறி ராஜசேகர், மனைவி விவிதாவை அழைத்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விவிதாவின் தந்தை காசி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விவிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story