சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.42 ஆயிரம் அபராதம்


சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.42 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 27 May 2019 4:15 AM IST (Updated: 26 May 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சேலம், 

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தடை விதித்து உள்ளது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நேற்று சேலம் புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, 4 ரோடு, குகை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திடீரென்று சோதனை நடத்தினர். இதில் 21 கடைகளில், தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டு பிடிக்க 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மாநகர் பகுதி முழுவதும் உள்ள கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த குழுவினர் நடத்திய சோதனையில் தற்போது 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினர்.


Next Story