ஓட்டப்பிடாரம் அருகே வேளாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான்


ஓட்டப்பிடாரம் அருகே வேளாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான்
x
தினத்தந்தி 27 May 2019 3:00 AM IST (Updated: 27 May 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வேளாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் இளைஞர் மன்றம், தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம் மற்றும் வ.உ.சிதம்பரனார் விளையாட்டு கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வேளாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது. இந்த போட்டி கப்பிகுளம்-பசுவந்தனை சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தது.

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சங்கிலிமாடன் தலைமை தாங்கினார்.

சென்னை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், வ.உ.சிதம்பரனார் விளையாட்டு கழக செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பசுவந்தனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் கலந்து கொண்டு மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் கப்பிகுளம் தொழில் அதிபர் அரிச்சந்திரன், தமிழ்செல்வன், பசுவந்தனை முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சரவணக்குமார், கப்பிகுளம் இளைஞர் மன்ற தலைவர் பாபு ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதில் முதல் இடத்தை பெற்ற நெல்லையை சேர்ந்த அஜித்துக்கு ரூ.11 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-வது இடம் பிடித்த சேலத்தை சேர்ந்த சசிக்குமாருக்கு ரூ.10 ஆயிரம், கோப்பையும், 3-வது இடம் பிடித்த நெல்லையை சேர்ந்த பசுபதிக்கு ரூ.9 ஆயிரம், கோப்பையும், 4-வது இடம் பிடித்த ஈரோட்டை சேர்ந்த சிவானந்தத்துக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

Next Story