வாய்மேடு அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வாய்மேடு அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ஊராட்சியில் ஆதியங்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆதியங்காடு கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வெளியேறி சாலையில் தேங்கி நின்று வீணாகிறது. இந்த குழாய் உடைப்பினை சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் வாய்மேடு, தகட்டூர், தென்னடார், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

சாலையில் பள்ளம்

மேலும் சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தற்போது கோடைகாலம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதியங்காடு கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயினை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story