செஞ்சி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு; 6 பேர் கைது
செஞ்சி அருகே இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு போலி மதுபானம் தயாரித்த 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயலில் உள்ள மின்மோட்டார் கொட்டகையில் சிலர் போலி மதுபானம் தயாரித்து, டாஸ்மாக் மதுபார்களுக்கு வாகனங்களில் கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்அடிப்படையில் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மணலப்பாடிக்கு விரைந்து சென்று மின்மோட்டார் கொட்டகைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியபோது அங்கு போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த சிலர் எரிசாராயத்துடன் கலர் பவுடர் மற்றும் மதுவாசனைக்காக எசன்ஸ் கலந்ததோடு, போலி லேபிள் ஒட்டிய பாட்டில்களில் அதனை நிரப்பி எந்திரம் மூலம் ‘சீல்’ வைத்துக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது.
இதைபார்த்து உஷாரான போலீசார் அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திண்டிவனம் கருவாம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணவாளன்(வயது 38), பசுமலைதாங்கலை சேர்ந்த பூங்காவனம் மகன் ராஜேந்திரன்(40), சவுட்டூரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(50), பூந்தமல்லியை சேர்ந்த குப்பன் மகன் விஜயகுமார்(28), வெள்ளப்பன் மகன் பச்சையப்பன்(47), ராமமூர்த்தி மகன் ரகு(42) ஆகியோர் என்பதும், இவர்கள் அங்கு போலி மதுபானம் தயாரித்து டாஸ்டாக் மதுபார்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலி மதுபானம் தயாரித்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த 50 லிட்டர் எரிசாராயம், 2,500 காலி பாட்டில்கள், 3,500 போலி பதுபான பெயர் கொண்ட லேபில்கள், மதுபானம் நிரப்பப்பட்ட 15 மதுபாட்டில்கள், மதுபாட்டில் மூடியில் ஒட்டும் ஸ்டிக்கர்கள், கலர் பவுடர், எசன்ஸ் பாட்டில்கள், பாட்டில் மூடியை சீல் வைக்கும் எந்திரம் மற்றும் மதுபாட்டில்கள், சாராயத்தை கடத்த ரகசிய அறை அமைத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஆகியோர் போலி மதுபான தொழிற்சாலை இயங்கிய மின்மோட்டார் கொட்டகையை பார்வையிட்டதோடு, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட எந்திரங்கள், போலி மதுபாட்டில்கள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டார். அதன் பிறகு போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்து, அங்கிருந்த 6 பேரை அதிரடியாக கைது செய்த சத்தியமங்கலம் போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கைதான மணவாளன் மீது திண்டிவனம் பகுதியில் ஏற்கனவே போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக மதுவிலக்கு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தயாரிக்கும் போலி மதுபாட்டில்கள் டாஸ்மாக் பார்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்து பார்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் இந்த போலி மதுபாட்டில்கள் பார் ஊழியர்கள் மூலம் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க அடிக்கடி தங்களது இடத்தை மாற்றி போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி மதுபானம் தயாரிப்பதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த சம்பவத்தில் டாஸ்மாக் ஊழியர்கள், பார் ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story